Open top menu
Monday 3 November 2014

              


     கூகுள், தற்போது, அதன் அஞ்சல் சேவையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பெயர் இன்பாக்ஸ் (Inbox). ஜிமெயில் மற்றும் கூகுள் நவ் (Google Now) ஆகிய இரண்டின் சிறப்பு கூறுகள் இதில் இணைந்து தரப்படுகின்றன. புதிய வித கட்டமைப்புகளில், வகைகளில் உங்கள் அஞ்சல்கள் பிரித்துத் தரப்படுகின்றன. இதனால், நாம் சரியான அஞ்சல் தகவல்களில் அதிக நேரம் செலவழிக்கலாம். ஸ்பேம் மெயில்கள், வர்த்தக ரீதியான மெயில்களைப் புறந்தள்ளலாம். அது மட்டுமின்றி, நம் பயனுள்ள மெயில்களும், அவற்றின் மையத் தகவல்கள் கோடி காட்டப்படுவதால், நாம் விரைவாகப் பார்த்து செயல்பட வேண்டிய மெயில்களை, உடனடியாக இன்பாக்ஸ் மூலம் காண முடியும். இதன் மூலம், தகவல் தொழில் நுட்பத்தில், கிட்டத்தட்ட ஒரு குப்பைத் தொட்டியாக மாறிவிட்ட ஜிமெயிலைத் திருத்தி அமைக்கும் பணியில் கூகுள் இறங்கியுள்ளது. 

               ஜிமெயில் பயன்படுத்தாதவர்களை, இக்காலத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் அனைவருமே ஜிமெயில் பயனாளர்களாக இருக்கிறோம். இருப்பினும் சில பிரச்னைகளை இதன் மூலம் நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். சில்லரை வர்த்தகர்களின் விளம்பர அஞ்சல்கள், ஸ்பாம் மெயில்கள், மால்வேர்களைத் தாங்கி வரும் மெயில்கள் போன்ற பல வேண்டத்தகாத, நாம் விரும்பாத அஞ்சல்கள் தொடர்ந்து நம் அஞ்சல் இன்பாக்ஸ் பெட்டியில் வந்து விழுகின்றன. இவற்றின் இடையேதான், நமக்கு முக்கியமான நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சல்களும் வருகின்றன. இதனால், சில வேளைகளில் நமக்குத் தேவையான அஞ்சல்கள நாம் கவனிக்கத் தவறுகிறோம். இந்த பிரச்னைகளைத் தீர்க்கவே, கூகுள் புதியதாக இன்பாக்ஸ் என்ற அப்ளிகேஷனைத் தருகிறது.

              இன்பாக்ஸ் எனப் பெயரிடப்பட்டாலும், இது ஜிமெயிலின் இன்பாக்ஸ் வசதியை மட்டும் கொண்டிருக்காது. இதன் மூலம் நம் விமானப் பயணங்கள், நமக்கு வர வேண்டிய பொருட்கள், நினைவூட்டல்கள் என்பன போன்றவற்றையும் இதில் நிர்வாகம் செய்திடலாம். ஜிமெயிலை வடிவமைத்து பராமரிப்பவர்களே, இந்த இன்பாக்ஸ் அப்ளிகேஷனையும் வடிவமைத்துள்ளனர் என்றாலும், இது முற்றிலும் மாறுபட்ட கூடுதல் வசதிகளைத் தரும் வகையில், அதிகமான பணிகளை மேற்கொள்ளும் என கூகுள் நிறுவனத்தில் அண்மையில் உயர் பதவிக்கு உயர்த்தப்பட்ட சுந்தர் பிச்சை தன் வலைமனைப் பதிவில் தெரிவித்துள்ளார். 
புதிய இன்பாக்ஸ், ஜிமெயிலுக்கு மாற்றானது அல்ல. ஏற்கனவே நமக்குக் கிடைக்கும் இன்பாக்ஸினை முற்றிலுமாக மாற்றி அமைக்கிறது. ஜிமெயில் நமக்கு அறிமுகமாகி ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் பல வகைகளில், பரிமாணங்களில் நம் பணிக் கலாச்சாரத்தினை மாற்றி வளப்படுத்தியிருக்கிறோம். ஆனால், நம் வாழ்வோடு இணைந்த ஜிமெயில் மாற்றம் பெறாமல் இருந்து வருகிறது. அதற்கு வளமையான மாற்றம் தரும் ஒரு முயற்சி தான் இந்த இன்பாக்ஸ்.



             ”முன்பிருந்த காலத்தைக் காட்டிலும், இப்போது அதிகமான எண்ணிக்கையில் நம் அக்கவுண்ட் இன்பாக்ஸில் மெயில்கள் குவிகின்றன. நமக்கு வரும் முக்கிய அஞ்சல்களும், இந்த குப்பையில் மாட்டிக் கொள்கின்றன. இதனால், ஏற்படும் சிறிய இடைவெளிகளில், நமக்கு வரும் மிக முக்கிய அஞ்சல்கள் நழுவிப் போகலாம். குறிப்பாக, நாம் நம் மொபைல் போன்கள் வழி, அஞ்சல்களைப் பார்க்கையில், இந்த தவறுதல்கள் ஏற்படுகின்றன. இங்கு நமக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டதே புதிய இன்பாக்ஸ்” என கூகுள் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

             இன்பாக்ஸ் நமக்கு வந்திருக்கும் அஞ்சல் செய்திகளை, தொகுப்புகளாகப் பிரித்து வைக்கிறது. Social, Promotions, and Finance என்பன போன்ற பிரிவுகளில் அடுக்குகிறது. இத்துடன் நமக்கான முக்கிய தகவல்களை ஹைலைட் செய்து காட்டுகிறது. ஏதேனும் நிகழ்வு குறித்த தகவல்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுப்பிய போட்டோக்கள் சார்ந்த தகவல்கள் என்பன போன்றவற்றைக் கோடி காட்டி, நாம் எவற்றை உடனே பார்க்க வேண்டும், சிறிது நாள் கழித்து பார்க்கலாம், பார்க்கவே வேண்டாம் எனப் பல வகைகளில் பிரித்துக் காட்டுகிறது. (இதன் பல்வேறு பணிகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை https://www.youtube....zNTjpUMOp4#t=19 என்ற முகவரியில் உள்ள காணொளிக் காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்)





இன்பாக்ஸ் பெறும் வழி

              இந்த இன்பாக்ஸ் அப்ளிகேஷனப் பயன்படுத்திப் பார்க்க, கூகுள் குறிப்பிட்ட ஜிமெயில் பயனாளர்களுக்கு அழைப்பு அனுப்பியுள்ளது. அழைப்பு பெற்ற ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்கள் மூவருக்கு, இதே போன்ற அழைப்பினை அனுப்பலாம். அவர்கள் இதே போல பயன்படுத்திப் பார்த்து, மேலும் மூவருக்கு அனுப்பலாம். இப்படித்தான், முதலில் ஜிமெயில் நமக்கு அறிமுகமாகியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அழைப்பிதழ் வேண்டும் அஞ்சல் ஒன்றை inbox@google.com என்ற முகவரிக்கு அனுப்பி, காத்திருந்து அழைப்பினைப் பெறலாம்.

            நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்து, அழைப்பிதழ் ஒன்றைப் பெற்றால், உங்கள் சாதனத்திற்கேற்ப, கூகுள் பிளே அல்லது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோருக்கு லிங்க் கிடைக்கும். டெஸ்க்டாப் பதிப்பினை inbox.google.com என்ற தளத்திலிருந்து பெற்றுக் கொள்ள அனுமதி கிடைக்கும். (Google Apps புரோகிராமினைத் தங்கள் வர்த்தக பயன்பாட்டுக்குக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த இன்பாக்ஸ் கிடைக்காது.)


ebx7dtF.png

      இன்பாக்ஸ் தற்போது இருக்கும் ஜிமெயில் அப்ளிகேஷனுக்கு மாற்றாகத் தரப்படவில்லை. ஜிமெயில் உடன் இணைந்தே இதனைப் பயன் படுத்த வேண்டும். ஆனால், புதிய அனுபவமும், செயல்பாடுகளும் வசதிகளையும் இது தரும். ஆச்சரியம் தரும் செயல்பாடு முதல் நோக்கில், இந்த இன்பாக்ஸ், நமக்கு ஆச்சரியத்தைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பு, வண்ணங்கள் என கிறங்க அடிக்கிறது. நம்முடைய மெசேஜ் அனைத்தும் அவை கிடைக்கப்பெற்ற நாள் வாரியாக அடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அஞ்சல்கள் மேலாக அமைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து முன் தினம் மற்றும் இந்த மாதம் என வரிசை செல்லும். இது மட்டுமின்றி, ஒவ்வொரு அஞ்சலுக்கும் ஓர் அடையாளம் தரப்பட்டு வகைப்படுத்தப்படும். புதிய அஞ்சல் ஒன்று வரும்போது, அது உடனடியாக வகைப்படுத்தப்பட்டு, அந்த தொகுதி புதியதாகக் காட்டப்படும்.


          ஏற்கனவே டெஸ்க்டாப் அஞ்சலில் நாம் பெற்றிருப்பது போல Social and Promotions என்ற இரு வகைகள், போனில் நாம் பார்க்கும் இன்பாக்ஸிலும் கிடைக்கும். புதியதாக Finance என்று ஒரு வகை தரப்படுகிறது. நாம் செலுத்த வேண்டிய பில்கள், கடிதங்கள் ஆகியவை இந்தப் பிரிவில் இணைக்கப்படும். நாம் வாங்கிய பொருட்கள் குறித்த அஞ்சல்களில் உள்ள எண்கள், ரசீதுகள் அறியப்பட்டு, அவையும் தொகுக்கப்படும். Travel என்ற வகையின் கீழ், நம் பயணவிபரம், விடுதிகளில் அறைகள் பதிவு சார்ந்த அஞ்சல்கள் அடுக்கப்படும். இவை அப்டேட் செய்யப்படுகையில், சரியாக முந்தைய அஞ்சல்களுடன் இணைக்கப்படும். எடுத்துக் காட்டாக, நீங்கள் அறை வேண்டி முன்கூட்டியே பதிவு செய்தது, உறுதி செய்யப்பட்டு ஒரு கடிதம் வந்தால், Travel என்னும் தொகுதி, இன்பாக்ஸில் முன்னதாகக் காட்டப்படும். மேலோட்டமாக, தங்கும் விடுதியின் பெயர், நாள் போன்ற தகவல்கள் காட்டப்படும். அதன் மீது கிளிக் செய்தால் அல்லது தட்டினால், உடன் இணைந்த அனைத்து கடிதங்களும் காட்டப்படும். அத்துடன் இல்லாமல், இந்த விடுதி இருக்கும் ஊருக்கு நீங்கள் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தால், அவையும் காட்டப்படும். இதற்கென பயண ஏஜெண்ட் ஒருவர் உதவி பெற்று, ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தால், அவருடனான அஞ்சல் தொடர்புகளும் காட்டப்படும். இதனால், ஒரே பார்வையில் தொடர்பான அனைத்து தகவல் களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.


பட்டன்கள் அறிமுகம்

         
              இன்பாக்ஸில் வரிசையாகப் பல பட்டன்கள் அறிமுகம் ஆகின்றன. முதலில் இவற்றைப் பயன்படுத்துவது சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால், பயன்படுத்திப் பார்க்கையில், இவை தரும் வசதிகளை நாம் விரும்புவோம். இதனைப் பயன்படுத்தி, மொத்தமாக சில அஞ்சல்களை பார்த்ததாக ஒதுக்கலாம். இன்னும் ஆழமாகப் பொறுமையாகப் படிக்க வேண்டும் எனத் திட்டமிடுபவற்றை, இன்பாக்ஸில் பின் அப் செய்து அமைக்கலாம். இந்த அஞ்சல், Promos அல்லது Social வகையில் செல்லக் கூடியதாக இருந்தால், அந்த குறிப்பிட்ட அஞ்சல் மட்டும், தனியாக வேறுபடுத்திக் காட்டப்படும். பின் அப் செய்து வைத்த அஞ்சலை நீக்க வேண்டும் என முடிவு செய்தால், பட்டனில் கிளிக் செய்திடலாம்; அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்திடலாம். மீண்டும் பின்னால் பார்க்க வேண்டும் என எண்ணினால், Done டேப் அழுத்தி ஒதுக்கி வைக்கலாம். 


           அஞ்சல் ஒன்றுக்கு பதிலளித்தல், முன்னோக்கி பிறருக்கு அனுப்புதல் மற்றும் புதிய அஞ்சல்களை உருவாக்குதல் ஆகியவை சற்று சிரமம் எடுத்துச் செய்திடல் வேண்டும். பதில் அனுப்ப அல்லது முன்னோக்கி பிறருக்கு அனுப்ப, அந்த அஞ்சலினைத் திறக்க வேண்டும். இமெயில் ஹெடர் பகுதியில், அல்லது அதற்கும் மேலாக, மூன்று புள்ளிகளுடன் ஒரு பட்டன் கிடைக்கும். இன்னொரு பட்டன், அஞ்சல் நம்மை வந்தடைந்த நேரம் அருகே காட்டப்படும். இதனைக் கிளிக் செய்தால், அல்லது தட்டினால், அஞ்சலுக்கான பதில் அனுப்பலாம்; அல்லது முன்னோக்கிப் பிறருக்கு அனுப்பலாம்.

              இன்பாக்ஸில் இருந்தபடியே, அஞ்சல் ஒன்றுக்குப் பதில் அனுப்ப விரும்பினால், அஞ்சலில் கிடைக்கும் சற்றுப் பெரிய அளவிலான சிகப்பு வண்ணத்தில் தரப்பட்டுள்ள + பட்டனை அழுத்த வேண்டும். நீங்கள் அண்மையில் தொடர்பு கொண்ட முகவரிகள் அனைத்தும் ஐகான்களாகக் காட்டப்படும். இவற்றில் தேவையான ஒன்றில் கிளிக் செய்தால், தட்டினால், உடன் அது கிடைக்கும். 

         புதியதாக ஒரு மெசேஜ் அமைக்க வேண்டும் என்றால், சிகப்பு வண்ணத்தில் தரப்பட்டுள்ள பென்சில் ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். அஞ்சல் எழுதுவதில் ஜிமெயில் தரும் அனைத்து வசதிகளும் இன்பாக்ஸில் தரப்படவில்லை. எடுத்துக் காட்டாக, ட்ரைவிலிருந்து நேரடியாக பைல் ஒன்றை அப்லோட் செய்திட முடியாது. 



நினைவூட்டல் மற்றும் கிடப்பில் போடுதல் (Reminders and Snooze)


              இன்பாக்ஸ் தரும் இரண்டு புதிய சிறப்பு அம்சங்கள் இவையாகும். இவை புதியவையா என்ற கேள்வி நிச்சயம் நம் மனதில் எழும். ஏனென்றால், Reminders என்பது ஏற்கனவே உள்ள Tasks என்பதைப் போன்றதே. அதே போல Snooze என்பது Boomerang add-on என்பதற்கு இணையானது. ஆனால், இன்பாக்ஸ் சற்று சிறப்பாக இரண்டையும் இணைக்கிறது. இன்பாக்ஸின் டெஸ்க்டாப் பதிப்பில், அஞ்சல் மீது நம் கர்சரைக் கொண்டு சென்று, அப்போது கிடைக்கும் கடிகார ஐகான் மீது கிளிக் செய்தால், அஞ்சல் ஒன்றை snooze செய்வதற்கான ஆப்ஷன்கள் கிடைக்கும். மொபைல் போன் பதிப்பில், அஞ்சல் மீது இடது பக்கமாக ஸ்வைப் செய்தால், இந்த ஆப்ஷன் கிடைக்கும். உடனடியாக சில அஞ்சல்களுக்குப் பதில் அளிக்க இயலாது. பதில் அளிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். அது போன்ற அஞ்சல்களைக் கையாள இந்த ஆப்ஷன்கள் மிகவும் உதவியாக இருக்கும். Reminders டூல், நம் செயல்பட வேண்டிய அஞ்சல்களை மேலாகத் தெரியும் வகையில் அமைக்க உதவுகின்றன. நினைவூட்டல் ஒன்றை அமைக்க, சிகப்பு வண்ணத்தில் உள்ள + பட்டனை கிளிக்க் செய்திட வேண்டும். பின்னர், ஊதா நிறத்தில் காட்டப்படும் விரல் ஐகானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நினைவூட்ட வேண்டிய செய்தியை டைப் செய்து, அதற்கான நேரத்தையும் அமைக்க வேண்டும். மொபைல் பதிப்பில், இருக்கும் இடம் அடிப்படையில் இந்த ஆப்ஷனை அமைத்திடலாம். இதற்கு லொகேஷன் செட்டிங்ஸ் இயக்கப்பட்டிருக்க வேண்டும். Google Now டூல் நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் அமைத்த நினைவூட்டல்கள் அங்கு காட்டப்படும்.



தொகுப்புகள் (Bundles)

            தற்போது ஜிமெயில் தரும் tabs போன்றவை இவை. ஆனால், இப்போது கூடுதலாகச் சில வகைகள் (categories) சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்புகளின் பெயரைக் கொண்டு, நீங்கள் காண வேண்டிய, அஞ்சல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கலாம்.


உதவிக் குறிப்புகள் (Assists)


          இது ஒரு புதிய வசதி. நினைவூட்டல்கள், அஞ்சல்கள் ஆகியவை சார்ந்த உதவிக் குறிப்புகள், (தொலைபேசி எண்கள், முகவரிகள்) அவற்றுடன் இணைக்கப்படும். எடுத்துக் காட்டாக, விடுதி ஒன்றில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்திட, அஞ்சல் அனுப்பினால், நினைவூட்டல் ஏற்படுத்தினால், அதனுடன், அந்த விடுதியின் முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவை இணைக்கப்படும். 



முக்கியத் தகவல்கள் (Highlights)

              ஒரே பார்வையில், ஓர் அஞ்சல் குறித்துத் தெரிந்து கொள்ள இந்த Highlights இணைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு இணைப்பு, போட்டோ அல்லது டாகுமெண்ட், எந்த மெயிலுடன் உள்ளது என்று தேட வேண்டியதில்லை. அதன் சிறிய நக அளவு படம், அது இருப்பதனைக் காட்டிக் கொடுக்கும். அஞ்சலை அடையாளம் கண்டு திறந்து பார்க்க முடியும்.

          சற்று கவனித்து கற்கவும் உங்கள் அஞ்சல்களை நிர்வகிப்பதில், இன்பாக்ஸ் சற்று வித்தியாசமான அணுகுமுறையை உங்களுக்குத் தருகிறது. இதனைக் கற்றுக் கொள்ள சிறிது காலம் உங்களுக்குத் தேவைப்படலாம். ஆனால், தொடர்ந்து பயன்படுத்தினால், ஓரிரு நாட்களில் அவற்றைக் கற்றுக் கொள்ளலாம். வழக்கமான முறையில், நேரப்படி வரிசையாக அமைந்தவற்றைப் பயன்படுத்த நீங்கள் விரும்பினால், இப்போது உள்ள முறையே உங்களுக்குப் போதுமானது. ஆனால், உங்களுக்கு வரும் இமெயில்கள், திறந்த வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களைப் போல உங்கள அழுத்துவதாக இருந்தால், புதிய இன்பாக்ஸ் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். அதனைக் கற்றுக் கொள்ள சிறிது காலம் எடுத்துக் கொள்வது உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பயன்களைத் தரும்.
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments